காத்தான்குடி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் லண்டன் கிளை அங்குரார்ப்பணக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக் கிழமை லண்டனிலுள்ள Harrow Sri Lankan Mosque இல் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் லண்டனில் வசிக்கும் சுமார் 30 காத்தான்குடி சகோதரர்கள் கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக லண்டனுக்கான இலங்கையின் பிரதித் தூதுவர் பி.எம். அம்சா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதேவேளை கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் அதனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பொறியியலாளர் எம்.எம்;. அப்துர் ரஹ்மானும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதன்போது லண்டன் கிளைக்கான நிர்வாக சபைத் தெரிவும் இடம்பெற்றது. (தெரிவு செய்யப்பட்ட நிர்வாகிகள் தொடர்பான பெயர் விபரங்கள் விரைவில் எமது இணையதளத்தில் பதிவேற்றப்படும்)
இங்கு கல்லூரியின் எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பாக ஆராயப்பட்;டதுடன் பழைய மாணவர் சங்கத்தினால் லண்டன் கிளையிடம் முன்வைக்கப்பட்ட சில கோரிக்கைகளும் இதன்போது ஆராயப்பட்டன.
இவற்றில் க.பொ.த. உயர் தர கணித, விஞ்ஞான பிரிவுக்கான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக் கொண்ட லண்டன் கிளை அதற்குத் தேவையான பொருளாதார ரீதியான ஒத்துழைப்பை வழங்கவும் முன்வந்தது.
இதற்கமைவாக பௌதீகவியல், இணைந்த கணிதம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்களை உடனடியாக நியமிப்பது எனவும் இவர்களுக்கான 6 மாத கால கொடுப்பனவுகளை லண்டன் கிளை பொறுப்பேற்றுக் கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
6 மாத காலத்தின் பின்னர் இத் திட்டம் தொடர்பான மதிப்பீடு ஒன்றை மேற்கொள்வது என்றும் அதன்பின்னர் இத் திட்டத்தை தொடர்வது தொடர்பில் ஆராய முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை லண்டன் கிளை அங்கத்தவர்கள் ஒன்று கூடி தமது வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வது எனவும் இவ் அங்குரார்ப்பணக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments:
Post a Comment